பட்னாவிஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீர் பாதுகாப்பு திட்டம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை


பட்னாவிஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீர் பாதுகாப்பு திட்டம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2020 3:03 AM IST (Updated: 15 Oct 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீர்பாதுகாப்பு திட்டம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா- சிவசேனா ஆட்சியில் ‘ஜல்யுக்த் சிவார் அபியான்’ என்ற நீர்பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது தேவேந்திர பட்னாவிசின் கனவு திட்டமாகும். இந்த திட்டத்தின் படி நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், தடுப்பணைகள் அமைப்பது, விவசாய பண்ணை குட்டைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2019-ம் ஆண்டுக்குள் மராட்டியத்தை வறட்சியில்லா மாநிலமாக மாற்றுவது இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இந்தநிலையில் ஜல்யுக்த் சிவார் திட்டத்தால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியாளர்கள் கூறி வந்தனர். சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில் இந்த திட்டம் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜல்யுக்த் சிவார் திட்டத்துக்காக ரூ.9 ஆயிரத்து 633 கோடி செலவு செய்யப்பட்டாலும், அதனால் கிடைத்த பலன் சிறிதளவு தான் என்று கூறப்பட்டு இருந்தது.

மோடி பாராட்டு

ஆனால் நேற்று முன்தினம் அகமத் நகரை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பாலசாகேப் விகே பாட்டீலின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜல்யுக்த் சிவார் திட்டத்தை வெகுவாக பாராட்டினார். இதற்கு தேவேந்திர பட்னாவிசும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

விசாரணை நடத்த முடிவு

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்யுக்த் சிவார் திட்டம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “மத்திய கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையாக கொண்டு தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டம் குறித்து விசாரிக்கப்பட உள்ளது. இதில் அரசியல் எதுவும் இல்லை” என்றார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின் அடிப்படையில் திறந்தவெளி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் வரவேற்பு

மந்திரி சபையின் இந்த முடிவை காங்கிரஸ் வரவேற்று உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், ஜல்யுக்த் சிவார் திட்டம் ஊழலின் மையம் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் ஆசிஷ் செலார் குற்றம்சாட்டி உள்ளார்.

சிவசேனா அங்கம் வகித்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் நடந்த திட்டம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் அழுத்தம் காரணமாக உத்தவ் தாக்கரே இந்த முடிவுக்கு வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story