மும்பை பெருநகரில் மின்தடை சதி வேலையா என்பதை கண்டறிய விசாரணை மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு


மும்பை பெருநகரில் மின்தடை சதி வேலையா என்பதை கண்டறிய விசாரணை மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2020 3:11 AM IST (Updated: 15 Oct 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பெருநகர பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை சதி வேலையா? என்பதை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை பெருநகர பகுதி முழுவதும் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் மின் வினியோகம் ஒவ்வொரு பகுதியாக சீரானது. இந்த மின் தடை காரணமாக மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் பணி முடங்கியது. நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் ஒரே நேரத்தில் மின் தடை ஏற்பட்டது, பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதாக அமைந்தது.

இந்த திடீர் மின் தடை சதி வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை மறுப்பதற்கு இல்லை என்று மாநில மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சதி வேலையா?

எங்களது பணியாளர்கள் கல்வா-பட்கா இடையேயான 400 கிலோவாட் மின்பாதையில் பராமரிப்பு பணியை மேற்கொண்டு இருந்தனர். அப்போது மின்சாரம் 1-வது பாதையில் இருந்து 2-வது பாதைக்கு திருப்பி விடப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. கார்கர் மின்நிலையத்தில் மின்சப்ளை நின்று விட்டது.

இதனால் மின்சாரம் இன்றி மும்பை தீவாக மாறியது. இது நடந்து இருக்கக்கூடாது. மேலும் இது சாதாரண பிரச்சினை அல்ல. இதற்கான காரணம் சதி வேலையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை குழு

மின் தடைக்கான காரணத்தை கண்டறிய மத்திய தொழில்நுட்ப குழு ஆராய்ந்து வருகிறது. அந்த குழு இந்த வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. மாநில அரசு தரப்பிலும் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. 2011-ம் ஆண்டில் இதுபோல மின்தடை ஏற்பட்டபோது, அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையும் ஆராயப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story