ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் ஆட்டம் எடுபடாது குமாரசாமி பேட்டி


ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் ஆட்டம் எடுபடாது குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2020 3:26 AM IST (Updated: 15 Oct 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரசின் ஆட்டம் எடுபடாது என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உடன் இருந்தார். பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் எங்கள் கட்சி(ஜனதா தளம்(எஸ்)) சார்பில் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். அவர் இன்று (அதாவது நேற்று) மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முறை எங்கள் கட்சியின் விசுவாசம் மிக்க நிர்வாகிக்கு டிக்கெட் வழங்கியுள்ளோம். நான் அவருக்கு ஆதரவாக இந்த தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளேன். இந்த தொகுதியின் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். இந்த ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதுவரை இந்த தொகுதியில் காங்கிரஸ் இரண்டு முறையும், பா.ஜனதா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரசின் ஆட்டம் எடுபடாது. காங்கிரஸ் தீ மூட்டும் வேலையை செய்கிறது. மக்கள் அந்த கட்சியை ஆதரிக்க மாட்டார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த கட்சி தலைவர்கள் ஓட்டு கேட்பார்கள். கொரோனோ வைரசை கட்டுப்படுத்துவதில் கர்நாடக பா.ஜனதா அரசு முழுவதுமாக தோல்வியடைந்து விட்டது.

கனவு நிறைவேறாது

இந்த தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜனதாவினர் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவு நிறைவேறாது. இந்த தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தீவிரமாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story