வடகர்நாடகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’


வடகர்நாடகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
x
தினத்தந்தி 15 Oct 2020 3:52 AM IST (Updated: 15 Oct 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

வடகர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கலரபுகி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

அலமட்டி அணை

இதன்காரணமாக தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ள பீதர், கலபுரகி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, விஜயாப்புரா, யாதகிரி உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இரவு, பகல் பாராமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியில் உள்ள அலமட்டி அணை, யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுரா கிராமத்தில் உள்ள பசவசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 519.60 மீட்டர் உயரம் கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 519.60 மீட்டராக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 69 ஆயிரத்து 613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 69 ஆயிரத்து 83 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் தொடர்ந்து விடப்பட்டு இருந்தது.

காட்டாற்று வெள்ளம்

இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 492.25 மீட்டர் உயரம் கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 491.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 403 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 578 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அதாவது 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 661 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

இதனால் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக பாகல்கோட்டை, யாதகிரி மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்து வந்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியேற்றனர்.

பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்ய ஆரம்பித்த மழை நேற்று மாலை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. பாகல்கோட்டை, உனகுந்தா, பாதாமி, பீலகி, ஜமகண்டி, தெரதால், முதோல், குலேதகுட்டா ஆகிய தாலுகாக்களில் மழை வெளுத்து வாங்கியது. உனகுந்தா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் உள்ள இரேஹல்லா குளம் நிரம்பியது.

இந்த நிலையில் நேற்று அந்த குளத்தின் கரை திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் உனகுந்தா டவுனில் உள்ள கும்பரஒனி, ஒம்சாந்தி படவானே ஆகிய பகுதிகளை சூழ்ந்தது. மேலும் இந்த 2 பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று 30 வீடுகளில் வசித்து வந்த மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். பின்னர் அவர்களை முகாம்களில் தங்க வைத்தனர். இதுபோல உனகுந்தா டவுனில் உள்ள கர்நாடக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பெட்ரோல் நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் ஆறுகளின் குறுக்கே உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடியது. இதனால் பாகல்கோட்டையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதுபோல விஜயாப்புரா மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள பபலேஸ்வர், தாலிகோட், பசவனபாகேவாடி, திக்கோடா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக விஜயாப்புரா மாவட்டத்தில் ஓடும் மூர்த்தி, டோனி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

கருவறை வரை புகுந்த தண்ணீர்

தாலிகோட் தாலுகா அடவினஹல்லா, சிவபுரா, கல்லதேவனகவுடா ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டோனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கல்லதேவனகவுடா கிராமத்தில் உள்ள சங்கமாதநாதா கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கோவிலில் உள்ள நந்தி சிலை தண்ணீரில் மூழ்கின. கருவறை வரை தண்ணீர் புகுந்தது. இடுப்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீரில் நேற்று காலை அர்ச்சகர் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்தார்.

ராய்ச்சூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள ராய்ச்சூர், மஸ்கி, சிந்தனூர், மான்வி, சிர்வார், தேவதுர்கா, லிங்கசுகூர் ஆகிய தாலுகாக்கள் மழை, வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக மஸ்கி பகுதியில் உள்ள அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மஸ்கி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அந்த ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் பரிதவித்து வருகின்றனர். மஸ்கியில் இருந்து ஹிரேகடவு என்ற ஊருக்கு செல்லும் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் பயிரிட்டு இருந்த விளைபயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

சாலைகள் துண்டிப்பு

கொப்பல் மாவட்டத்திலும் கொப்பல், குஷ்டகி, கனககிரி ஆகிய தாலுகாக்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கனககிரி அருகே லட்சுமிகெரே ஏரி 12 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் ஏரியில் சென்று நீச்சல் அடித்து வாலிபர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் ஏரிக்கரையில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

இதுபோல பல்லாரி மாவட்டம் சண்டூர் தாலுகா ராயனகெரே பகுதியில் பெய்த கனமழைக்கு வாழை தோட்டங்களுக்கு தண்ணீர் புகுந்தது. இதில் வாழை மரங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் நெற்பயிர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. கலபுரகி மாவட்டத்தில் கலபுரகி, சிஞ்சோலி, சேடம், கமலாப்புரா, அப்சல்புரா, சித்தாப்பூர் ஆகிய தாலுகாக்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக சிஞ்சோலி டவுனில் ஓடும் முல்லாமரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மெனகனஹள்ளி கிராமம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மலகேடா, தண்டோல்கச்சூர் ஆகிய கிராமங்களை சுற்றி வெள்ளம் புகுந்து உள்ளது. கலபுரகி-சேடம், கலபுரகி-சிஞ்சோலி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. கலபுரகி டவுன் பகுதியில் ஓடும் ரவுத்ரவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கலகியில் உள்ள நீலகண்டேஸ்வரா கோவிலை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

3 தொழிலாளிகள் மீட்பு

இந்த நிலையில் நேற்று காலை கலபுரகி டவுன் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழைக்கு வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் அந்த வீட்டில் வசித்து வந்த பீமாபாய் (வயது 96) என்ற மூதாட்டி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல கதக் மாவட்டம் ரோண் அருகே வீடு இடிந்து விழுந்ததில் சங்கரம்மா (63) என்பவரும் இறந்தார். இவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிஞ்சோலி அருகே ஜனகோலி பகுதியில் ஓடும் சந்திரம்பள்ளி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் நேற்று பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் சந்திரம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சந்திரம்பள்ளி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் குறுக்கே உள்ள 3 மரக்கிளைகளை பிடித்து கொண்டு 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்களை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் மீட்டு வந்தனர்.

ரெட் அலர்ட்

இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் பீதர், கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டு உள்ளது. வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, அதனால் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story