மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு: கனகன் ஏரியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு


மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு: கனகன் ஏரியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2020 10:49 PM GMT (Updated: 14 Oct 2020 10:49 PM GMT)

கனகன் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து பரிசோதனைக்காக தண்ணீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

புதுச்சேரி,

புதுவை கனகன் ஏரி மேம்பாட்டு பணிகளில் கவர்னர் கிரண்பெடி நேரடி ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஏரி பகுதியில் அடிக்கடி ஆய்வுகளை நடத்தினார். இதன் எதிரொலியாக ஏரியில் மண்டிக்கிடந்த புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. அங்கு படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி ஏரியின் கரையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆங்காங்கே நிழல்தரும் மரங்களும் வளர்க்கப்பட்டன. அவற்றை பராமரிக்கும் பொறுப்பினை அந்த பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் ஏற்றுக்கொண்டன.

இதற்கிடையே புதுவை கதிர்காமம் மருத்துவக்கல்லூரியின் கழிவுகள் ஏரியில் கலக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக முன்பு ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

அதிகாரிகள் ஆய்வு

இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுகள் ஏரிக்குள் செல்வதை தடுக்க வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. ஏரிப்பகுதி தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தது.

இந்தநிலையில் தற்போதும் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதுதொடர்பாக கவர்னருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழு கனகன் ஏரி பகுதிக்கு விரைந்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், சுற்றுச்சூழல்துறையின் முதுநிலை என்ஜினீயர் ரமேஷ், கவர்னர் மாளிகையின் குறைதீர்ப்பு அதிகாரி பாஸ்கர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஏரியில் செத்து மிதந்த மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

ஆக்சிஜன் அளவு

சுற்றுச்சூழல் துறையினர் ஏரி தண்ணீரில் விஷம் கலந்துள்ளதா? என்பதை கண்டறியும் விதமாக மாதிரிகளை சேகரித்துள்ளனர். மேலும் ஏரி நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதா? என்பது குறித்தும், அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பது ஏன்? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

பொதுவாக தண்ணீரில் லிட்டர் ஒன்றுக்கு 5 முதல் 12 மில்லிகிராம் வரை ஆக்சிஜன் இருந்தால் மீன்கள் உயிர்வாழும். தற்போது கனகன் ஏரியில் சேகரிக்கப்பட்ட மாதிரியில் லிட்டர் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் ஆக்சிஜன் உள்ளது. எனவே ஆக்சிஜன் குறைவினால் மீன்கள் இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் மீன்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சுற்றுச்சூழல் துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஏரியினை பராமரிக்கும் குடியிருப்போர் சங்கங்களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் அரசுத் துறையினர் உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

சமூக விரோதிகளின் கூடாரம்

கனகன் ஏரியானது கவர்னரின் ஆய்வுக்குப்பின் புதுப்பொலிவினை கண்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து தற்போது அதன் நிலைமை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. கனகன் ஏரி கரை பகுதி மீண்டும் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. அவர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசி விடுகின்றனர்.

மருத்துவக்கல்லூரியின் சுவர் ஓர பகுதிகளில் நாள்தோறும் சமூக விரோதிகள் கூடி மது குடிப்பது, தகாத செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. இதைக்கட்டுப்படுத்த மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story