சிவகாசியில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 1,279 பண்டல் பட்டாசுகள் பறிமுதல் - போலீசார் சோதனையில் சிக்கியது + "||" + In Sivakasi, kept without permission 1,279 bundles of firecrackers seized - Police were caught in the crossfire
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 1,279 பண்டல் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசு கடைகளில் வியாபாரிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் விற்பனைக்கு தேவையான பட்டாசுகளை மொத்த வியாபாரிகள் கடைகளுக்கு கொண்டு வந்து வைக்கும்போது அளவுக்கு அதிகமாக வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் நிலை உருவாகிறது. இதைதவிர்க்க சிலர் கட்டிடங்களை வாடகைக்கு பிடித்து அதில் பட்டாசு பண்டல்களை வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இதற்காக அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். பலர் அனுமதி பெறும் நிலையில் சிலர் மட்டும் உரிய அனுமதியின்றி கட்டிடங்களில் பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்து வருகிறார்கள். இதுகுறித்து அவ்வப்போது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சில இடங்களில் அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் கட்டிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தார்.
இதில் உசேன் காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 190 பட்டாசு பண்டல்கள், 62 பண்டல்கள் கலர் மத்தாப்பூ, 89 பண்டல்கள் கம்பி மத்தாப்பூ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அருணாச்சலம் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் போலீசார் சோதனை செய்த போது அங்கு அனுமதியின்றி 14 பண்டல்கள் மத்தாப்பூபெட்டி, 44 பண்டல்கள் கம்பி மத்தாப்பூகள் இருந்தது. இதை தொடர்ந்து மதுரை அரசரடியை சேர்ந்த வேல்மணி என்பவரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் சாத்தூர் ரோட்டில் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 480 பட்டாசு பண்டல்கள், 295 கம்பி மத்தாப்பூ பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்து சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் அதன் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 105 பண்டல்கள் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவகாசி அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களாக சிவகாசி பகுதியில் அதிரடியாக சோதனை செய்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்து வருவது மொத்த வியாபாரிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கைப்பற்றிய பட்டாசு பண்டல்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.