கன்னட திரை உலகில் போதை பொருள் பயன்பாடு: நடிகர் விவேக் ஓபராயின் வீட்டில் அதிரடி சோதனை


கன்னட திரை உலகில் போதை பொருள் பயன்பாடு: நடிகர் விவேக் ஓபராயின் வீட்டில் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 16 Oct 2020 3:15 AM IST (Updated: 16 Oct 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரை உலகில் போதை பொருள் பயன்பாடு விவகாரத்தில், நடிகர் விவேக் ஓபராயின் மும்பை வீட்டில், பெங்களூரு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மும்பை,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் நடிகைகள் உள்பட 14 பேர் மீது பெங்களூரு காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகனான ஆதித்யா ஆல்வா தலைமறைவாக இருந்து வருகிறார். அவர், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியதுடன், பெங்களூருவில் உள்ள தனது வீடு மற்றும் ரெசார்ட் ஓட்டலில் வைத்து விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியதும், அதில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் ஆதித்யா ஆல்வாவை தேடப்படும் நபராகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

விவேக் ஓபராய் வீட்டில் சோதனை

தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வா, பிரபல இந்தி நடிகரான விவேக் ஓபராயின் நெருங்கிய உறவினர் ஆவார். அதாவது ஆதித்ய ஆல்வாவின் சகோதரியை தான் விவேக் ஓபராய் திருமணம் செய்துள்ளார். இதனால் தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வா, மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் பதுங்கி இருப்பதாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் இருந்து ஆதித்யா ஆல்வாவை காப்பாற்ற விவேக் ஓபராய் முயற்சித்து வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, கோர்ட்டு அனுமதி பெற்று மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் நேற்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்காக பெங்களூருவில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மும்பைக்கு வந்திருந்தனர். பின்னர் நடிகர் விவேக் ஓபராய் வீடு முழுவதையும் அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ஆதித்யா ஆல்வா அங்கு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்துவதற்கு நடிகர் விவேக் ஓபராய் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பரபரப்பு

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story