பெங்களூருவில் பயங்கரம் மதுபான விடுதி உரிமையாளர் சுட்டுக் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் பயங்கரம் மதுபான விடுதி உரிமையாளர் சுட்டுக் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Oct 2020 9:59 PM GMT (Updated: 15 Oct 2020 9:59 PM GMT)

பெங்களூருவில் மதுபான விடுதியின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு,

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்தவர் மணிஷ் (வயது 45) . இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எஸ். ஹெச்.பி. ரோட்டில் ஒரு மதுபான விடுதியை மணிஷ் நடத்திவந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் தனது மதுபான விடுதியின் முன்பாக நின்று மணிஷ் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மணிசை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் மணிசின் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

பரபரப்பு

உயிருக்கு போராடிய மணிஷ் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர. அங்கு மணிசுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் மற்றும் கப்பன் பார்க் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மணிசை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. ஆனால் அந்த மர்ம நபர்கள் யார்? என்ன காரணத்திற்காக மணிசை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. இது குறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகிவிட்ட 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story