வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடகம் தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின


வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடகம் தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 16 Oct 2020 4:00 AM IST (Updated: 16 Oct 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.

பெங்களூரு,

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

கனமழை

இதனால் கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகர்நாடக மாவட்டங்களில் பெய்து வரும் கனமழைக்கு 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் கலபுரகி மாவட்டம் ஜேவர்கி அருகே நெரபோலி கிராமத்தை சேர்ந்த பாகண்ணா திப்பண்ணா(வயது 21) என்பவர் பீமா ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தார்.

வினாடிக்கு3 லட்சம் கனஅடி

இந்த நிலையில், வடகர்நாடக மாவட்டங்களில் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வடகர்நாடகத்தில் உள்ள பீமா, கிருஷ்ணா, கட்டபிரபா, மல்லபிரபா, துங்கபத்ரா, நாராயணபுரா ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்திலும் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பீமா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள உஜ்ஜனி அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் விஜயாப்புரா மாவட்டத்தில் ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. விஜயாப்புராவில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், உஜ்ஜனி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், பீமா ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் ஓடுகிறது. இதன் காரணமாக பீமா ஆற்றையொட்டி வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விஜயாப்புராவில் மட்டும் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த திராட்சை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

வீடுகள் சேதம்

பாகல்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாகவும் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபோல, யாதகிரி மாவட்டம் சுரபுரா, சகாபுரா தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலமாக மீட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக கலபுரகி, விஜயாப்புரா, ராய்ச்சூர், யாதகிரி ஆகிய மாவட்டங்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேம்பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கலபுரகி மாவட்டத்தில் மட்டும் 515 கால்நடைகள் உயிர் இழந்திருப்பதாகவும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் சிக்கிய 4,782 மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணி தீவிரம்

மேலும் கலபுரகி மாவட்டத்தில் மட்டும் 36 தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டு, அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கலபுரகி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கலபுரகி மாவட்டத்தில் சித்தாபுரா, பனகா கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு ரப்பர் படகுகள் மூலமாக மக்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இதுபோல, ராய்ச்சூர், விஜயாப்புரா, கதக், பெலகாவி, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகிறார்கள்.

வடகர்நாடகத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதுடன், ஏராளமான வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக விஜயாப்புரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக துவரை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எடியூரப்பா இன்று ஆலோசனை

இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். அதுபோல, வருவாய்த்துறை மந்திரியான அசோக், இன்று கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

வடகர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வடகர்நாடக மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story