மாவட்ட செய்திகள்

உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு: புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைது + "||" + new groom Suicide by hanging Wife, 4 people including mother-in-law arrested

உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு: புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைது

உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு: புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைது
உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவி, மாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் கே.கே.குளம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. அவருடைய மகன் கோபிநாத் (வயது 30). டிப்ளமோ (கேட்டரிங்) படித்த இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி ஜெயப்பிரியா (23). உறவினர்களான இவர்களுக்கு, கடந்த 6.12.2019 அன்று திருமணம் நடந்தது.


அதன்பிறகு கோபிநாத் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஜெயப்பிரியா சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி சவுதி அரேபியாவில் இருந்து கோபிநாத் சொந்த ஊருக்கு வந்தார். இதனையடுத்து தனது மனைவியை அழைப்பதற்காக சுருளிப்பட்டிக்கு அவர் சென்றார்.

ஆனால் அவருடன் வருவதற்கு ஜெயப்பிரியா மறுத்து விட்டார். மேலும் ஜெயப்பிரியா, அவருடைய தந்தை பிரேம்குமார், தாயார் விமலா, அண்ணன் நிஜந்தன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை திட்டினர். இதனையடுத்து அவர் தனது வீட்டுக்கு வந்து விட்டார்.

மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனம் உடைந்த கோபிநாத் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் காலை நீண்டநேரமாகியும் அவர் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று அவருடைய தந்தை பார்த்தார்.

அப்போது அறையின் மின்விசிறியில் கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர், தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நான், கோபி எழுதி கொள்கிறேன். எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் நான் உயிரை மாய்த்து கொள்கிறேன். நான் இதை செய்யாவிட்டால், என்னுடைய குடும்பத்தினர் என்னை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு இறந்து விடுவார்கள். அதனால் என் முடிவை, நானே தேடி கொள்கிறேன்.

எனது அம்மா, அப்பாவுக்கு நான் ஒரு மகனாய், என்னுடைய தம்பிக்கு அண்ணனாய் என்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்து விட்டேன். இனிமேல் என்னுடைய அம்மா, அப்பாவை பார்த்து கொள்ள தம்பி இருக்கிறான். என் சாவுக்கு 7 பேர் காரணம். உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும். என் சாவுக்கு பிறகு, இந்த மாதிரியான முடிவை இனிமேல் யாரும் எடுக்க வேண்டாம். அதனால் தான், நான் இந்த முடிவை எடுத்து கொள்கிறேன். என் சாவுக்கு காரணமான ஜெயப்பிரியா (மனைவி), பிரேம்குமார் (மாமனார்), கமலா (மாமியார்), நிஜந்தன் (மைத்துனர்), ஜெயப்பிரியாவின் உறவினர்கள் விமலா, வாசியம்மாள், நர்மதா ஆகியோருக்கு உண்மையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாத்தின் தந்தை பாலசுப்பிரமணி, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, கோபிநாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜெயப்பிரியா, விமலா (45), நிஜந்தன் (25), கமலா (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை செய்த கோபிநாத்திடம், அவருடைய சம்பள பணம் கேட்டு மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொல்லை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட, சவுதி அரேபியாவில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அவர் தூக்குப்போட பயன்படுத்திய ஆணி பிடுங்கியதால் அவர் உயிர் தப்பிய தகவல் வெளியாகி உள்ளது. மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம்
ராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
2. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு
பொன்னேரி அருகே ஆன்லைன் பாடம் புரியாததால் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.