மாவட்ட செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது + "||" + Continuous rains in the Western Ghats: Papanasam Dam water level exceeds 100 feet

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. குற்றாலத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கன மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,941 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 94.30 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று மேலும் 7.10 அடி உயர்ந்து, 101.40 அடியாக இருந்தது.

ஒரே நாளில் 9 அடி உயர்ந்த சேர்வலாறு

இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 113.48 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 122.64 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 70.90 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,464 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதேபோல் கொடுமுடியாறு அணை நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 35.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 23 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு

களக்காடு தலையணையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சாரல் மழை பெய்து சீசன் தொடங்கும். ஆனால் இந்தாண்டு ஜூன் மாதம் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் தலையணையில் தண்ணீர் வற்றி வறட்சி நிலவியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் தலையணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் கடந்த மாதம் பெய்த மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் தலையணையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. எனவே மூடப்பட்ட தலையணையை மீண்டும் திறந்து, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி அணைகள் நிரம்பின

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. இந்த அணைக்கு வருகிற 31 கன அடி தண்ணீரும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணையும் இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 120 கன அடி தண்ணீரும் மறுகால் பாய்ந்து செல்கிறது. கடையம் அருகே உள்ள 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையும் நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையின் பாதுகாப்பு கருதி உபரியாக 140 கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் உச்சத்தை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

இதுதவிர ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா நதி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. 85 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 490 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குற்றாலத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. இதேபோன்று பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணமாக கடந்த 7 மாதங்களாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தற்போதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-28, சேர்வலாறு-27, மணிமுத்தாறு-4, கொடுமுடியாறு-23, அம்பை-3, சேரன்மாதேவி-1, நாங்குநேரி-2, ராதாபுரம்-13, நெல்லை-1.

கடனா அணை-22, ராமநதி-35, கருப்பாநதி-20, குண்டாறு-35, அடவிநயினார்-30, ஆய்க்குடி-6, செங்கோட்டை-18, சிவகிரி-1, தென்காசி-16.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
2. ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
3. பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம்
பலத்த மழை காரணமாக புழல் அருகே வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம் அடைந்தனர்.
4. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி பெங்களூருவில் பலத்த மழை
பெங்களூருவில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
5. சிக்பள்ளாப்பூரில் தொடர் கனமழை: வீடு இடிந்து விழுந்து தந்தை-மகன் சாவு மேலும் 2 பேர் படுகாயம்
சிக்பள்ளாப்பூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை