பெரியகுளம் அருகே திருமணம் நிறுத்தப்பட்டதால் அரசு பெண் ஊழியர் தற்கொலை


பெரியகுளம் அருகே திருமணம் நிறுத்தப்பட்டதால் அரசு பெண் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2020 12:00 PM IST (Updated: 16 Oct 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே, திருமணம் நிறுத்தப்பட்டதால் அரசு பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் கருப்பையா. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதியின் 2-வது மகள் மீனா (வயது 26). இவர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் தட்டச்சராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி மணமகன் வீட்டில் இருந்து, மீனா வீட்டுக்கு சிலர் வந்தனர். அவர்கள் மணமகள் குடும்பத்தினரிடம் ஒரு புகைப்படத்தை காட்டினர்.

அந்த புகைப்படத்தில் மீனாவும், மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியை சேர்ந்த வாலிபரும் இருந்தனர். இந்த புகைப்படத்தை, மணமகன் செல்லப்பாண்டியின் செல்போனுக்கு அந்த வாலிபர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக கூறி, மணமகன் வீட்டார் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மீனாவிடம், அவருடைய தாயார் ஜெயலட்சுமி விசாரித்தார். அப்போது மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு படித்தபோது தன்னிடம் வாலிபர் ஒருவர் நட்பாக பழகினார். அவர், தன்னிடம் ‘சைக்கோ‘ போல் நடந்து கொண்டார். தன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும், அதனையும் மீறி திருமணம் நிச்சயிக்கப்பட்டால் அதனை நிறுத்து விடுவேன் என்றும் மிரட்டினார். மேலும் 2 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி தன்னிடம் பணம் பறித்தார் என்று கண்ணீர் மல்க தனது தாயாரிடம் மீனா கூறினார்.

இதனையடுத்து மீனாவை, அவரது தாயார் சமாதானம் செய்தார். இருப்பினும், திருமணம் நிறுத்தப்பட்டதால் மனம் உடைந்த மீனா, நேற்று முன்தினம் தனது வீட்டின் குளியல் அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட அரசு பெண் ஊழியர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story