அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு


அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 16 Oct 2020 9:32 AM IST (Updated: 16 Oct 2020 9:32 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான தொற்றுநோய் தடுப்பு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளாக அனைத்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

கொசு உற்பத்தியாகாமல், நோய் தடுப்பில் தங்களை ஈடுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதியில் கிடக்கும் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், குப்பைகள் போன்றவற்றை அகற்றி, கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தப்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர், பாதுகாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகள், குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களின் சுற்றுப்புற பகுதிகளில் கொசு உற்பத்தியாகாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். கால்நடை மற்றும் பறவைகள் மூலம் பரவும் நோய்களை கண்காணித்து கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கால்நடை பராமரிப்புத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து உணவு விடுதிகளிலும், உணவு பொருள் வினியோகிக்கும் மையங்களில் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையினர் தங்கள் மையம் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய் குறித்த விவரங்களை மருத்துவ அலுவலர்களிடம் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

மேலும் விரைவில் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி சுகாதாரத்துறையினர் போதுமான அளவிற்கு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனுக்குடன் அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ் பவுலின், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story