தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு திறப்பு


தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு திறப்பு
x
தினத்தந்தி 17 Oct 2020 12:55 AM IST (Updated: 17 Oct 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு நேற்று திறக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு திறப்பு விழா தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று நடந்தது. விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் சாகி தலைமை தாங்கி, காணொலி காட்சி மூலம் புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலை வகித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு நிர்வாக ரீதியாக இன்று அத்தனை அமைப்புகளும் இயங்கி வருகிறது. நீதி விரைவாக கிடைப்பதற்கு புதிய தொடக்கமாக இந்த கோர்ட்டை தொடங்கி வைத்ததற்கு மாவட்ட மக்கள் சார்பில் நான் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறுவார்கள். இதனால் விரைவாக வழக்கை நடத்துவதற்கு வசதியாக இந்த கோர்ட்டு திறக்கப்பட்டு உள்ளது. அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட முதன்மை நீதிபதி என்.லோகேசுவரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நீதிபதி பத்ரிதாசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மகேசுவரி, தூத்துக்குடி வக்கீல் சங்கம் திலக் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story