கிருஷ்ணா, பீமா ஆறுகளில் தொடர் வெள்ள பெருக்கு ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது


கிருஷ்ணா, பீமா ஆறுகளில் தொடர் வெள்ள பெருக்கு ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 17 Oct 2020 3:27 AM IST (Updated: 17 Oct 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் தொடர் வெள்ள பெருக்கு காரணமாக ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் 150 கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக், பெலகாவி, கொப்பல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இடைவிடாமல் 4 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்ததால் அந்த மாவட்டங்கள் தற்போது வெள்ளத்தில் மிதக்கிறது.

மேலும் கனமழை காரணமாக அந்த மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்தது மற்றும் மின்னல் தாக்கியதன் காரணமாக 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது அந்த மாவட்டங்களில் மழை பெய்வது குறைந்துள்ளது. ஆனாலும் அந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழைநீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்பதால், கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆறுகளில் வெள்ள பெருக்கு

இந்த நிலையில், வடகர்நாடக மாவட்டங்களில் மழை பெய்வது நின்று விட்டாலும், மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக கிருஷ்ணா, பீமா ஆறுகளில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டிய அணைகளில் இருந்து அதிகஅளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது கிருஷ்ணா ஆற்றில் 7 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பெலகாவி, கலபுரகி மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமான மேம்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

இதுபோல, பீமா ஆற்றில் 5 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விஜயாப்புரா, ராய்ச்சூர், யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பெருக்கு உண்டாகி இருக்கிறது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக கலபுரகி, பீதர், ராய்ச்சூர், பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

150 கிராம மக்கள் பாதிப்பு

குறிப்பாக கலபுரகி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக 47 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒட்டு மொத்தமாக 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அந்த கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மழை பாதித்த மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

ரப்பர் படகுகள் மூலமாக வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகிறார்கள். வெள்ள பெருக்கு காரணமாக ஏராளமான மேம்பாலங்கள் மூழ்கி உள்ளதால், பல கிராமங்களுக்கு சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மீட்பு பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Next Story