தெருவோர கடைகளை அகற்ற எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகை


தெருவோர கடைகளை அகற்ற எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Oct 2020 10:11 PM GMT (Updated: 16 Oct 2020 10:11 PM GMT)

புதுவையில் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி,

புதுவையில் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று காலை காராமணிக்குப்பத்தில் இருந்து முதலியார்பேட்டை வரை சிமெண்டு சாலையில் நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதற்கு தெருவோர வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக நகர வியாபார குழுவை சேர்ந்த பிரபுராஜ் அங்கு சென்று பேசினார். அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story