லஞ்சம் வாங்கியதாக கைதான நகராட்சி என்ஜினீயரின் டைரி சிக்கியது அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு


லஞ்சம் வாங்கியதாக கைதான நகராட்சி என்ஜினீயரின் டைரி சிக்கியது அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு
x
தினத்தந்தி 17 Oct 2020 3:49 AM IST (Updated: 17 Oct 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட புதுவை நகராட்சி என்ஜினீயரின் டைரி சிக்கியது. அதன் அடிப்படையில் அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் அந்த பகுதியில் வீடு கட்டுவதற்காக சாலையில் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்திருந்தார். அங்கு ஆய்வு நடத்திய புதுச்சேரி நகராட்சி என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தி, அனுமதியின்றி கட்டுமானப் பொருட்களை சாலையில் குவித்து வைத்து இருந்ததற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். இதுபோதாது என மேலும் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத இளந்திரையன் சி.பி.ஐ.யில் இதுகுறித்து புகார் செய்தார். இதையடுத்து அவர்களது ஆலோசனைப்படி கடந்த 14-ந் தேதி நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற இளந்திரையன் அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் முக்கிய டைரி ஒன்று சிக்கியது. அதில் லஞ்சம் வாங்கியது, அந்த பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது? என எழுதி வைத்து இருந்தார். இதில் உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து விசாரணை நடத்துவதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது உள்ளாட்சி துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைதான கிருஷ்ணமூர்த்திக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை நேற்று புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கிருஷ்ணமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story