காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு


காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2020 3:57 AM IST (Updated: 17 Oct 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்கால்,

காரைக்கால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு மார்க்கெட் ரூ.11.86 கோடி செலவில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, மார்க்கெட் கட்டிடத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கடைகளை முறைப்படி வழங்கவேண்டும்

பழமை வாய்ந்த நேரு மார்க்கெட்டை புதிதாக கட்டி முடிப்பதற்கு யாருடைய தடைப்பட்ட முயற்சிகளும் கிடையாது. இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டவுடன் அப்படியே போட்டு விடாமல் ஏற்கனவே யாரெல்லாம் இங்கு கடை வைத்திருந்தார்களோ அவர்களுக்கு கடைகளை முறைப்படி வழங்கவேண்டும்.

இங்கு நான் வரும்போதெல்லாம் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டது உண்மை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்டத்தின மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், மாவட்ட வளர்ச்சிக்காக, இந்த அரசு மேலும் பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் திட்ட துணை இயக்குனர் ஆஷிஸ்கோயல் நன்றி கூறினார்.

இந்த விழாவில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் நேரு மார்க்கெட் வாசல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் தொட்டி திறப்பு

முன்னதாக காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலபொன்பேற்றி கிராமத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

விழாவில் சந்திரிகா பிரியங்கா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் சேர்மேன் சிங்காரவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story