மாவட்ட செய்திகள்

பழனியில், பட்டுப்போன மரம் விழுந்து பலியான என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை கோரி உறவினர்கள் மறியல் + "||" + In Palani, To the wife of the engineer who fell from the tree and died Stir relatives seeking government jobs

பழனியில், பட்டுப்போன மரம் விழுந்து பலியான என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை கோரி உறவினர்கள் மறியல்

பழனியில், பட்டுப்போன மரம் விழுந்து பலியான என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை கோரி உறவினர்கள் மறியல்
பழனியில் சாலையோரத்தில் நின்ற பட்டுப்போன மரம் விழுந்து பலியான என்ஜினீயர் மனைவிக்கு அரசு வேலை கோரி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பழனி,

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த புதுஆயக்குடி 12-வது வார்டை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (வயது 45). என்ஜினீயர். இவர் பழனி அண்ணாநகரில் உள்ள தனியார் கட்டிட நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.


அண்ணாநகர் பகுதியில் வந்தபோது, சாலையோரம் பட்டுப்போன நிலையில் இருந்த வாகைமரம் திடீரென அவர் மீது சாய்ந்து விழுந்ததில், ஹரிகரசுதன் பலியானார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து ஹரிகரசுதனின் உடலை வாங்குவதற்கு அவருடைய உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் திடீரென்று அரசு மருத்துவமனை முன்பு பழனி-திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு வேலை வழங்கக்கோரி...

பின்னர் போராட்டம் நடத்திய உறவினர்கள், பலியான ஹரிகரசுதனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பட்டுப்போன மரத்தை அகற்றக்கோரி பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும், அதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் பழனி நகரில் சாலையோரத்தில் உள்ள பட்டுப்போன மரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.