மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 4½ அடி உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 4½ அடி உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2020 5:04 AM IST (Updated: 17 Oct 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 4½ அடி உயர்ந்துள்ளது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவாரப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான, பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 100 அடியை தாண்டி 101.40 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 4½ அடி உயர்ந்து, நீர்மட்டம் 105.90 அடியாக இருந்தது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,600 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் குறைக்கப்பட்டு, வினாடிக்கு 373 கன அடி தண்ணீர் மட்டும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த அணையுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 125.65 அடியாக உள்ளது.

இதே போல், மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் 2 அடி உயர்ந்து 72.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து, 40 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 255 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது. நம்பியாறு மற்றும் வடக்கு பச்யைாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி ஆகிய 4 அணைகளும் நிரம்பி வழிகின்றன. குண்டாறு அணையில் 30 கன அடி, அடவிநயினார் அணையில் 80 கன அடி, ராமநதி அணையில் 140 கன அடி, கருப்பாநதி அணையில் 25 கன அடி என அணைக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

Next Story