ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்: கருப்புக்கொடிகள் கட்டி பொதுமக்கள் போராட்டம்


ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்: கருப்புக்கொடிகள் கட்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2020 12:15 AM GMT (Updated: 17 Oct 2020 12:15 AM GMT)

ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கோரி கருப்புக்கொடிகள் கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாநகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வரும் நகரமாக உள்ளது. வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதாலும், ஒரு வழிப்பாதைகள் முறையாக பின்பற்றப்படாததாலும் நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக சாலையோர ஆக்கிரமிப்புகள், முறையற்ற வாகன நிறுத்தங்கள் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட முடியாததாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. மேம்பாலம் பகுதியில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் மற்றும் சுவஸ்திக் கார்னர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிரமமின்றி செல்ல இந்த ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டது. ஆம்புலன்சுகள் 2 வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாறியதால் சத்தி ரோடு மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து பிரப் ரோடு (மீனாட்சி சுந்தரனார் சாலை), பெருந்துறை ரோடு, ஈ.வி.என்.ரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி வழியாக சவீதா சந்திப்புக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

கருப்புக்கொடி போராட்டம்

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அதிக வாகன போக்குவரத்து மற்றும் நாச்சியப்பா வீதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டதால் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோட்டை பகுதி பொதுமக்கள் நல சங்கம் சார்பில் 2 வாரங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நேற்று காலை அந்த பகுதி மக்கள் நாச்சியப்பா வீதியில் உள்ள கடைகளின் முன்பு கருப்பு கொடிகள் கட்டி போராட்டம் நடத்தினார்கள். திடீர் என்று வீதி முழுக்க கருப்பு கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.

விபத்துகள்

இதுபற்றி கோட்டை பொதுமக்கள் நல சங்க தலைவரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான கருப்புசாமி கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் தினசரி வாகனங்கள் பெருகி வருகின்றன. ஆனால், போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேட்டூர் ரோடு மிகப்பெரிய போக்குவரத்து கொண்டதாகும். அந்த ரோட்டினை ஒரு வழியாக மாற்றும்போது அதற்கு இணையான ஒரு ரோட்டில் போக்குவரத்து திருப்பி விடப்பட வேண்டும். இல்லை என்றால் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் வகையில் மாற்றுப்பாதைகள் வழியாக திருப்பிவிட வேண்டும்.

ஆனால் அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் நாச்சியப்பா வீதி கடுமையான வாகன போக்குவரத்து நெரிசலில் உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து வெளி வரும் வாகனங்கள் மட்டுமின்றி, சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் ஒரே நேரத்தில் வருவதால் நாச்சியப்பா வீதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. முதியோர்கள், சிறுவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே மாற்றுப்பாதையை உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை

சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘ஈரோடு மாநகரில் ஒரு வழிப்பாதை உருவாக்குவது என்பது சவாலான விஷயம். ஒரு சாலையை அடைத்தால் இன்னொரு சாலையில் பிரச்சினை வரும். எனவே முழுமையாக சாலை வசதி மற்றும் போக்குவரத்து குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சோதனை ஓட்டம் செய்து முறையாக ஒரு வழிப்பாதை செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் விஷயமாகவே இது இருக்கும்’ என்றார்.

இதற்கிடையே மேட்டூர் ரோட்டை மீண்டும் இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி வணிகர்கள் கோரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story