ஓரடியம்புலம் கிராமத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்


ஓரடியம்புலம் கிராமத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2020 8:21 AM IST (Updated: 17 Oct 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

ஓரடியம்புலம் கிராமத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

வாய்மேடு,

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஓரடியம்புலம் கிராமத்தில் நல்லாற்றங்கரையில் வனத்துறை சார்பில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு, பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளில் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் அமைந்துள்ள ஆறுகளின் வழியாக நல்ல தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்கவும், கடல்நீர் உட்புகாமல் தடுத்திடவும், தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் ரூ.1,650 கோடி மதிப்பீட்டில் கதவணைகள் கட்டுவதற்காகவும், பழைய நீர்க்குமிழிகள், நீரொழுங்கிகளை புனரமைக்கவும் திட்டம் வகுத்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.670 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வளவனாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு, வெள்ளையாறு போன்ற ஆறுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த ஆறுகளின் கரைகளில் மேம்பாடு செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, வாகனங்கள் செல்லும் வகையிலும் 3,420 மரங்கள் வெட்டப்பட்டன. 1 மரம் வெட்டினால் அதற்கு

பதிலாக 10 மரக்கன்றுகளை நட்டு வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அரசாணை.

அதன்படி இந்த ஆறுகளின் கரைகளில் வெட்டப்பட்ட 3,420 மரங்களுக்கு பதிலாக 34,200 மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்த்தெடுக்கும் பணியில் வனத்துறை பணியாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளார்கள். இந்த மரக்கன்றுகளை வளர்த்தெடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story