தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானை, விவசாயியை துதிக்கையால் தூக்கி வீசியது - குடிசையையும் சேதப்படுத்தியது
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானை விவசாயியை துதிக்கையால் தூக்கி வீசியது. மேலும் குடிசையையும் சேதப்படுத்தியது.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் கோடம்பள்ளி தொட்டியை சேர்ந்தவர் காந்தி (வயது 60). விவசாயி. இவரது தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மானாவாரி நிலத்தில் அவர் மக்காச்சோளம், ராகி பயிர் செய்துள்ளார்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள், யானைகள் இரவு நேரத்தில் காந்தியின் தோட்டத்துக்குள் புகுந்து பயிரை நாசம் செய்து வந்தன. இதனால் பயிர்களை பாதுகாக்க காந்தி தோட்டத்தில் குடிசை அமைத்து இரவு நேரத்தில் தங்கி காவல் காத்து வருகிறார்.
அதே போல் நேற்று முன்தினம் அவர் தோட்டத்துக்கு சென்று குடிசையில் உட்கார்ந்து காவல் காத்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை திடீரென தோட்டத்துக்குள் புகுந்தது. இருட்டாக இருந்ததால் காந்தி யானை வருவதை கவனிக்கவில்லை.
சற்றும் எதிர்பார்க்காத வகையில் காந்தி அருகில் வந்த யானை துதிக்கையால் அவரை தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த அவர் வலி தாங்க முடியாமல் “அய்யோ, அம்மா” என்று அலறினார். பின்னர் யானை அங்கு அமைக்கப்பட்டு இருந்த குடிசையை காலால் மிதித்து தள்ளி சேதப்படுத்தியது.
அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த காந்தி, உடனே தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தாளவாடி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story