பெங்களூரு விமான நிலைய குடோனில் 2½ கிலோ தங்கம் மாயம் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு


பெங்களூரு விமான நிலைய குடோனில் 2½ கிலோ தங்கம் மாயம் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
x
தினத்தந்தி 18 Oct 2020 9:16 PM GMT (Updated: 18 Oct 2020 9:16 PM GMT)

பெங்களூரு விமான நிலைய குடோனில் வைக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட 2½ கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை சுங்கத்துறைக்கு சொந்தமான குடோனில் வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் குடோனில், சுங்கத்துறை இணை கமிஷனர் சேத்தன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படும் நகைகளை அவர் பார்வையிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கு இடைவெளியில் பறிமுதல் செய்யப்பட்டதில் 2½ கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது.

6 பேர் மீது வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்தன், தங்கம் மாயமானது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளான வினோத் சின்னப்பா, கேசவ், லிங்கராஜ், டீன் ரெக்ஸ், ரவி சேகர், ஹிரேமத் ஆகியோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 2½ கிலோ தங்கம் மாயமானது குறித்து, சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சேத்தன் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை முறையாக கையாளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வினோத் சின்னப்பா, கேசவ், லிங்கராஜ், டீன் ரெக்ஸ், ரவி சேகர், ஹிரேமத் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தது, சக அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story