கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் மந்திரி ஈசுவரப்பா பேச்சு


கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் மந்திரி ஈசுவரப்பா பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2020 9:29 PM GMT (Updated: 18 Oct 2020 9:29 PM GMT)

கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பிறப்படுத்தப்பட்டோர் சாதிகளின் கூட்டமைப்பு சார்பில், சமூக, அரசியல், பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த கோரி பெங்களூருவில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மந்திரி ஈசுவரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சியில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது மக்கள்தொகை கணக்கெடுப்பை போன்றது. இது சித்தராமையா ஆட்சியில் நடத்தப்பட்டாலும், அமல்படுத்தப்படவில்லை. அதுகுறித்து ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பவில்லை. அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி வந்தது. அப்போதும் இந்த கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடவில்லை. செயல்படுத்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொருளாதார கணக்கெடுப்பு

இப்போது கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நடக்கிறது. நாங்கள் இந்த சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம். இதற்கு அனைத்து சாதியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கர்நாடக மேல்-சபையில் சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, இந்த சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் எதிர்ப்புகள் வந்தாலும் அந்த அறிக்கையை அமல்படுத்துவோம்.

இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா பேசினார்.

Next Story