ஒரு நாளைக்கு 4 உடைகளை அணிந்து “ஷோ” காட்டும் பிரதமர் மோடி குமாரசாமி கடும் தாக்கு


ஒரு நாளைக்கு 4 உடைகளை அணிந்து “ஷோ” காட்டும் பிரதமர் மோடி குமாரசாமி கடும் தாக்கு
x

பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 4 உடைகளை அணிந்து ஷோ காட்டுவதாக கூறி அவரை, குமாரசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அந்த தொகுதியில் பிரசாரம் செய்தார். லக்கெரேயில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:-

தேவேகவுடா குடும்பத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது. நாட்டிலேயே ஒரு மாநில முதல்-மந்திரி வெளிப்படையாக கண்ணீர்விட்டது யார் என்றால் அது நான் மட்டுமே. அப்போது அத்தகைய மோசமான நிலையில் நான் இருந்தேன். பா.ஜனதா மீதும், அக்கட்சியின் வேட்பாளர் மீதும் நான் மென்மையான போக்கை பின்பற்றுவதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். நான் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள் குறித்து பேசுவது இல்லை.

நேரம் ஒதுக்குவது இல்லை

இங்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர், ரூ.250 கோடிக்கு போலி ரசீதுகளை தயாரித்து மோசடி செய்துள்ளார். ஆனால் எங்கள் கட்சி வேட்பாளர் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கியுள்ளார். எனது அரசை யாரும் 10 சதவீத கமிஷன் அரசு என்று சொல்லவில்லை. நான் மக்களுக்கு நீண்டகாலத்திற்கு உதவும் நோக்கத்தில் தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினேன்.

பிரதமர் மோடி நமது மாநில முதல்-மந்திரியிடம் பேசுவதற்கே நேரம் ஒதுக்குவது இல்லை. இது போல் தேசிய கட்சிகள் கர்நாடகத்தை அவமதிப்பு செய்கின்றன. கன்னடர்களின் சுயமரியாதை, கவுரவத்தை காக்க இந்த இடைத்தேர்தல் மூலம் தேசிய கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

4 உடைகள்

பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளில் சீனாவுடன் போட்டி போடுவது இருக்கட்டும், வங்கதேசத்துடன் போட்டி போடும் நிலைக்கு நாட்டை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 3, 4 உடைகளை அணிந்து கொண்டு மக்கள் முன் தோன்றி “ஷோ“ காட்டுவதே மோடியின் சாதனை. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சமாதி ஆக்குவோம் என்று கூறுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story