முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் யானை திடீர் சாவு வனத்துறையினர் விசாரணை


முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் யானை திடீர் சாவு வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 19 Oct 2020 4:58 AM IST (Updated: 19 Oct 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் யானை திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முக்கூடல்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தாவூத் மீரான். இவர் ஒரு பெண் யானையை வளர்த்து வந்தார். இதை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் மீரான் யானையுடன் நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு வந்தார். அங்கு யானையை குளிப்பாட்டி விட்டு ஆற்றங்கரையில் இளைப்பாற விட்டு இருந்தார்.

நள்ளிரவில் யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று காலையில் யானை திடீரென்று இறந்து கிடந்தது. இதுகுறித்து உடனடியாக முக்கூடல் போலீசுக்கும், அம்பை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடக்கம் செய்யும் பணி

வனத்துறை அதிகாரி குமார் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் நெல்லை கால்நடை உதவி இயக்குனர் ஜான் சுபாஷ், நெல்லை வனத்துறை டாக்டர் மனோகரன், முக்கூடல் கால்நடை மருத்துவர்கள் ஆகியோரும் வந்து பார்வையிட்டனர். பின்னர் யானையை பரிசோதனை செய்தனர்.

ஆனால் யானை எதனால் இறந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. பின்னர் யானையை பொக்லைன் எந்திரம் மூலம் அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடரும் சம்பவம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பை அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் தோட்டத்தில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. அதைத்தொடர்ந்து தற்போது முக்கூடலில் மற்றொரு யானை திடீரென்று இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

முக்கூடல் ஆற்றங்கரையில் யானை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story