திண்டுக்கல் அருகே குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்


திண்டுக்கல் அருகே குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 5:18 AM IST (Updated: 19 Oct 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டையில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை குடகனாறு நீர்ப்பாசன விவசாயிகள், குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆத்தூரில் இருந்து குடகனாற்றில் சில நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் வருவதால் மேலும் சில நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று குடகனாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், கூடுதலாக நாட்கள் தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து தண்ணீர் திறக்கும்படி கலெக்டர் அலுவலகத்தில், அனுமந்தராயன்கோட்டை குடகனாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். மேலும் குடகனாற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். எனினும், குடகனாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணி துறையும் குடகனாறு விவசாயிகளை காப்பாற்றும்படி சுவரொட்டி அச்சிட்டு ஒட்டினர். அதன்படி அனுமந்தராயன்கோட்டை, வக்கம்பட்டி, கூத்தம்பட்டி, பொன்மாந்துறை, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அந்த சுவரொட்டியில், கடந்த சில ஆண்டுகளாக குடகனாற்றில் தண்ணீர் வராததால் விவசாயம் செய்யமுடியவில்லை. கால்நடைகள் தீவனம் மற்றும் குடிநீர் இல்லாமலும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்தும் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, குடகனாற்றில் 150 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குடகனாற்றில் தண்ணீர் திறக்கும்படி வலியுறுத்தி விவசாயிகள் கருப்புக்கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் நேற்று கருப்புக்கொடி கட்டி இருந்தனர்.

இதுகுறித்து அனுமந்தராயன்கோட்டை குடகனாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் சின்னப்பன் கூறுகையில், குடகனாற்றில் 7 ஆண்டுகளுக்கு பின்னர், 15 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. அது பள்ளங்களை மட்டுமே நிரப்பியது. அதுவும் தற்போது வறண்டு விட்டது. இதனால் 15 நாட்கள் வந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை. ஆத்தூரில் குடகனாற்றில் தண்ணீர் வருகிறது. ஆனால், இங்குள்ள குடகனாறு வறண்டு கிடக்கிறது. குடகனாற்றின் தண்ணீர் திசை மாற்றி வைகை ஆற்றை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். விவசாயத்தை காப்பதற்கு ஆண்டுக்கு 150 நாட்கள் குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும், என்றார்.

Next Story