லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலி: கொள்முதல் நிலைய பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் - குளத்தில் அரசு முத்திரையிட்ட சாக்கு பண்டல்கள் கிடந்ததால் பரபரப்பு


லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலி: கொள்முதல் நிலைய பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் - குளத்தில் அரசு முத்திரையிட்ட சாக்கு பண்டல்கள் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 3:51 AM GMT (Updated: 19 Oct 2020 3:51 AM GMT)

மன்னார்குடி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை எதிரொலியாக கொள்முதல் நிலைய பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையம் அருகே உள்ள குளத்தில் அரசு முத்திரையிட்ட சாக்கு பண்டல்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்ணாரபேட்டையில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் செய்ய எடுத்து வரப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 155 நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் முறைகேடு நடந்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக கண்ணாரபேட்டை கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜ், காவலாளி கனகராஜ், தற்காலிக பணியாளர் சந்தானம் ஆகிய 3 பேரை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தின் அருகாமையில் உள்ள குளத்தின் ஓரத்தில் சாக்கு பண்டல்கள் கிடந்தன. இதில் 9 பண்டல்களில் 250 பழைய சாக்குகள், 200 புதிய சாக்குகள் என 450 அரசு முத்திரையிட்ட சாக்குகள் குளத்தில் வீசப்பட்டதால் நுகர்பொருள் வாணிக பழக அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சாக்குகளை கைப்பற்றிய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடையவர்கள்தான் இந்த சாக்குகளை குளத்தில் வீசி இருக்கக்கூடும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

முறைகேடு நடந்த கண்ணாரபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே சாக்கு பண்டல்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story