ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த வேலைக்கார வாலிபர் கைது ரூ.1.30 கோடி நகைகள், பணம் மீட்பு


ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த வேலைக்கார வாலிபர் கைது ரூ.1.30 கோடி நகைகள், பணம் மீட்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 10:21 PM GMT (Updated: 19 Oct 2020 10:21 PM GMT)

பெங்களூருவில் ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடிய மேற்கு வங்காள மாநில வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ஜே.பி.நகர் 3-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் பாபு. இவர், ரியல்எஸ்டேட் அதிபர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ராஜேஷ் வீட்டில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கைலாஷ் தாஸ் (வயது 35) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அவர் வேலை செய்தார். இதனால் கைலாஷ் மீது ராஜேஷ், அவரது குடும்பத்தினர் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.

தன்னுடைய வீட்டிலேயே கைலாசை, ராஜேஷ் தங்கியிருக்க வைத்திருந்தார். மேலும் கொரோனாவுக்காக ராஜேஷ், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட, கைலாஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 10-ந் தேதி ராஜேஷ், அவரது குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டனர். அன்றைய தினம் மருத்துவமனையில் இருந்து ராஜேஷ் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் கைலாஷ் இல்லை. அதே நேரத்தில் ராஜேஷ் அறையில் இருந்த லாக்கரும் திருட்டுப்போய் இருந்தது. அதில், ரூ.1 கோடிக்கு மேல் நகை, பணம் இருந்தது.

வேலைக்கார வாலிபர் கைது

இதையடுத்து, கைலாசை ராஜேஷ் குடும்பத்தினர் தேடினார்கள். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் கைலாஷ் தான் நகை, பணத்தை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் ராஜேசுக்கு ஏற்பட்டது. இதுபற்றி ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட கைலாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், ராஜேஷ் வீட்டில் திருடிய நகை, பணத்துடன் மேற்கு வங்காளத்திற்கு தப்பி சென்ற கைலாசை ஜே.பி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

லாக்கரை உடைக்கமுடியவில்லை

அதாவது ராஜேஷ் வீட்டில் 6 ஆண்டுக்கும் மேலாக வேலை செய்ததால், கைலாஷ் மீது ராஜேஷ் குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கைலாஷ், ராஜேஷ் வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்டு, அவற்றை திருடுவதற்கு திட்டமிட்டு வந்துள்ளார். அதன்படி, கடந்த 9-ந் தேதி ராஜேஷ் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது அறைக்கு சென்று லாக்கரை உடைத்து நகை, பணத்தை திருடுவதற்கு கைலாஷ் முயன்றுள்ளார். ஆனால் டிஜிட்டல் லாக்கர் என்பதால், அதனை உடைக்க அவரால் முடியவில்லை.

இதனால் லாக்கரை திருடி சென்று ராஜேஷ் வீட்டில் உள்ள தனது அறையில் கைலாஷ் வைத்து கொண்டார். மறுநாள் (10-ந் தேதி) மருத்துவமனையில் இருந்து ராஜேஷ் திரும்பி வருவது பற்றி அறிந்ததும், அந்த லாக்கரையே திருடி கொண்டு கைலாஷ் சென்றுவிட்டார். பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு சென்ற அவர், அங்குள்ள தங்கும் விடுதியில் 2 நாட்கள் தங்கியுள்ளார். அங்கு வைத்து லாக்கரை உடைக்க முயன்றும், அவரால் முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு செல்ல அவர் முடிவு செய்தார்.

ரூ.1.30 கோடி மதிப்பு

இதற்காக மைசூருவில் இருந்து பெங்களூரு யஷ்வந்தபுரத்திற்கு வந்த அவர், ராஜேஷ் வீட்டில் திருடிய லாக்கருடன் ரெயில் மூலமாக மேற்கு வங்காள மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையில், கைலாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அப்போது தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்த கைலாஷ், வேறு ஒருவரிடம் இருந்து செல்போனை வாங்கி மேற்கு வங்காளத்தில் வசிக்கும் மனைவியை தொடர்பு கொண்டு பேசியதுடன், ஊருக்கு வருவது பற்றியும் தெரிவித்திருந்தார். இதுபற்றிய தகவல் ஜே.பி.நகர் போலீசாருக்கு கிடைத்திருந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் மேற்கு வங்காளத்திற்கு சென்று கைலாசை கைது செய்திருந்தனர்.

பின்னர் அவர் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் இருந்து அந்த லாக்கரும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாக்கருக்குள் 1 கிலோ 731 கிராம் தங்க நகைகள், 2 கிலோ 536 கிராம் எடை கொண்ட வெள்ளி சாமி சிலை, ரூ.8.50 லட்சம், 2 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் வீட்டில் இருந்து திருடி சென்ற லாக்கரை உடைக்கும் முன்பாகவும், அதில் எவ்வளவு நகை, பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னதாக போலீசாரிடம் கைலாஷ் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அவர் மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story