மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழா: கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேசிய கல்வி கொள்கை


மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழா: கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேசிய கல்வி கொள்கை
x
தினத்தந்தி 20 Oct 2020 4:15 AM IST (Updated: 20 Oct 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்று மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பெங்களூரு,

ஒவ்வொரு துறையில் வளர்ச்சியை உறுதி செய்யவும், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய மையத்தில் உயர்கல்வியை படிக்க இளைஞர்களிடையே போட்டி எழுந்து உள்ளது. கடந்த 6-7 மாதங்களில் சீர்திருத்தங்கள் அதிகரித்து வருகிறது. வேளாண்மை, விண்வெளி, பாதுகாப்பு, விமான போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் நாடு வளர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் நலனுக்காகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேற்றம் அடைய செய்வதற்காகவும் மாற்றங்கள் செய்யப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இளம் இந்தியாவுக்கு மகத்தான வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் எடுக்கப்படும் முடிவுகள் பல்வேறு தடைகளால் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தன.

ஆளுமைக்காக சீர்திருத்தம்

கடந்த 6 ஆண்டுகளில் கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேசிய கல்வி கொள்கையில் மாற்றம், விவசாயிகளை பாதுகாக்கும் வேளாண்மை சீர்திருத்த சட்டங்கள் ஆகியவை அமல்படுத்தப்பட்டு உள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. ஜி.எஸ்.டி. மூலம் அன்னிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களில் நன்மைகள் ஏற்பட்டு உள்ளது. 21-ம் நூற்றாண்டு தேவைகளுக்கு மத்தியில் உள்கட்டமைப்பு மேம்பாடு சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தி உயர்கல்வித்துறையில் மாணவர்கள் முன்னேற நாட்டின் கல்வி முறை உதவுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் ஆகியவைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது இந்தியாவை உலகளாவிய கல்விக்கான மையமாக மாற்றுவதற்கும், இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. உயர்கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் புதிய நிறுவனங்களை திறப்பதோடு மட்டும் அல்லாமல் ஆளுமைக்காக சீர்த்திருத்தம், பாலின சமத்துவம், சமூக பகிர்வை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுக்கிறது.

எனது அனுதாபங்கள்

மருத்துவ கல்வியில் சீர்திருத்தங்கள் வெளிப்படை தன்மையை கொண்டு வருகின்றன, இந்த பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மறைந்த மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அதிக பெண் பட்டதாரிகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. தசரா விழாவையொட்டி கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கொரோனா பாதிப்பு காரணமாக பண்டிகைகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். கர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒவ்வொரு முயற்சியும் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, கர்நாடக துணை முதல்-மந்திரியும், உயர்கல்வித்துறை மந்திரியுமான அஸ்வத் நாராயண் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story