சாலைவரியை ரத்துசெய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போராட்டம் 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்


சாலைவரியை ரத்துசெய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போராட்டம் 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 20 Oct 2020 4:36 AM IST (Updated: 20 Oct 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

சாலை வரியை ரத்துசெய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுச்சேரி,

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி சமீப காலமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் அதற்கான சாலை வரியை ரத்துசெய்யவேண்டும் என்று சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்காக போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அவர்கள் தங்கள் வாகனங்களுடன் புதுவை 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்கு வந்தனர். 100 அடி சாலையின் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துத்துறை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனவே அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாஸ்கர் எம்.எல்.ஏ.

போராட்டம் குறித்து தகவலறிந்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், முருகவேலு, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். தாசில்தார் ராஜேஷ் கண்ணாவும் அங்கு வந்து சுற்றுலா வாகன உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்களது சமரசத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனால் மேலும் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான பாஸ்கர் அங்கு விரைந்து வந்தார். சுற்றுலா வாகன உரிமையாளர்களை அழைத்துக் கொண்டு போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை சந்தித்தார். பின்னர் அமைச்சர் ஷாஜகானை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அமைச்சர் உறுதி

அப்போது சாலைவரியை ரத்து செய்வது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்கலாம் என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார். அதன்படி ஒருநாள் கால அவகாசம் அளிக்குமாறு வாகன உரிமையாளர்களிடம் பாஸ்கர் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். அதை ஏற்று வாகன உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போக்கு வரத்துத்துறை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ரோடியர் மில் திடலில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். சாலை வரியை ரத்துசெய்யும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story