கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை முழுமையாக திறக்க கோரி காய்கறி வியாபாரிகள் உண்ணாவிரதம்


கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை முழுமையாக திறக்க கோரி காய்கறி வியாபாரிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Oct 2020 5:10 AM IST (Updated: 20 Oct 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை முழுமையாக திறக்ககோரி காய்கறி வியாபாரிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. காய்கறி மார்க்கெட் திருமழிசைக்கும், பூ மார்க்கெட் வானகரம் மற்றும் பழ மார்க்கெட் மாதவரம் பஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அடுத்தடுத்த ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கடந்த மாதம் முதல் மீண்டும் மளிகை மற்றும் காய்கறி மொத்த விற்பனை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது கோயம்பேட்டில் உணவு தானிய மார்க்கெட் மற்றும் காய்கறி மொத்த விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர் உண்ணாவிரதம்

இதையடுத்து கோயம்பேட்டில் காய்கறி சில்லரை விற்பனை கடைகள் மற்றும் பூ, பழம் மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் என்று அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை முழுமையாக திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்ககோரி பழ வியாபாரிகள் மற்றும் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் கோயம்பேடு பழ மார்க்கெட் வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சாகும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையறிந்த சில்லரை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமொத்த காய்கறி வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து அறிந்ததும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து கடைகளையும் திறப்பதற்கு இன்னும் சில தினங்களில் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கோவிந்தராஜன் கூறினார். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Next Story