ஜெயங்கொண்டத்தில், காணாமல் போன 2 சிறுமிகள் மீட்பு - போக்சோ சட்டத்தில் 3 சிறுவர்கள் கைது


ஜெயங்கொண்டத்தில், காணாமல் போன 2 சிறுமிகள் மீட்பு - போக்சோ சட்டத்தில் 3 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 19 Oct 2020 10:15 PM GMT (Updated: 20 Oct 2020 2:55 AM GMT)

ஜெயங்கொண்டத்தில் காணாமல் போன 2 சிறுமிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதுத்தொடர்பாக சிறுவர்கள் 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 வயது மற்றும் 15 வயது சிறுமிகள் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். 

இந்நிலையில் இந்த சிறுமிகளுக்கும், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த 17, 18 வயதுடைய 2 சிறுவர்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுதொடர்பாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இந்த பழக்கம் இனி தொடரக்கூடாது என்று சிறுவர்-சிறுமிகளை எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு, பீரோவிலிருந்த 7 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் பள்ளிச் சான்றுகள் ஆகியவற்றுடன் சிறுமிகள் இருவரும் மாயமாகினர். 

அவர்களை ஜெயங்கொண்டம் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்களை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சிறுமிகள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுவர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story