மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு


மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 20 Oct 2020 6:15 AM GMT (Updated: 20 Oct 2020 6:07 AM GMT)

மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பொதுகுழாய் இணைப்பை துண்டிக்கக் கூடாது. கிராம ஊராட்சிகளில் ஆதிதிராவிட பெண் பிரதிநிதிகள் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை தாமதமின்றி நேரடியாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வடமதுரை அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த உள்ளாட்சி தலைவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் புதிரை வண்ணார் எழுச்சி பேரவையினர் உள்இடஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு கொடுத்தனர். அந்த மனுவில், புதிரை வண்ணார் சமுதாயத்தினர் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்கிறோம். ஆதிதிராவிடர் பட்டியலில் இருக்கும் எங்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு சான்றிதழ் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள்நத்தம் பறையபட்டி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் எங்கள் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு பொன்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான பொதுபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். எனவே, கோவில் பாதையை மீட்டு தருவதோடு, கோவிலில் திருவிழா நடத்தி மக்கள் வழிபாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story