அஞ்சுகிராமம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


அஞ்சுகிராமம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2020 5:45 AM GMT (Updated: 20 Oct 2020 6:26 AM GMT)

அஞ்சுகிராமம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மருங்கூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணி, கட்டிட தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இவர்களில் இளைய மகள் ஜெயலட்சுமி (வயது 25).

மணியின் மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் முடிந்தது. மற்ற இரண்டு மகள்களுக்கும் திருமணமாகவில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமியின் தாயார் செல்வம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். இது ஜெயலட்சுமிக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில தினங்களாக யாருடனும் அதிகம் பேசாமல் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

சம்பவத்தன்று, ஜெயலட்சுமி வீட்டின் குளியலறையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விரைந்து சென்று ஜெயலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து அஞ்சுகிராம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story