கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - நாகர்கோவிலில் நடந்தது
நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்லாயிரக்கணக்கான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தும் கிடைக்காமல் உள்ள கொரோனா நிவாரண உதவி நிதி, உணவு பொருட்களையும் வழங்குவதற்கான அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நலவாரிய செயல்முறைகளை எளிமைப்படுத்தி பயனாளிகள் காலதாமதமின்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை அவசரமாக மேற்கொள்ள வேண்டும், தேங்கி கிடக்கும் கல்வியுதவி, திருமண உதவி, இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றிற்கான கேட்பு மனுக்களை நேரடியாக பெற்று பயனாளிகள் பயன்பெறுவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆமோஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கராஜ், துணை தலைவர் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் துரைராஜ், முருகேசன், லாரன்ஸ், ஜாண்மில்டன், ஞானதாஸ் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச்செயலாளர் அந்தோணிமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.தம்பிராஜ், ராஜம்மாள், சகாதேவன், இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story