மும்பையில் இன்று முதல் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணிக்கலாம் ரெயில்வே மந்திரி அனுமதி


மும்பையில் இன்று முதல் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணிக்கலாம் ரெயில்வே மந்திரி அனுமதி
x
தினத்தந்தி 21 Oct 2020 2:53 AM IST (Updated: 21 Oct 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் மும்பையில் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணம் செய்ய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அனுமதி வழங்கி உள்ளார்.

மும்பை,

மும்பையில் தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் ஆஸ்பத்திரி ஊழியர்கள், வங்கி மற்றும் அரசு பணியாளர்கள் பயணம் செய்து வருகின்றனா். மேலும் மாற்றுத்திறனாளிகள், தூதரக அதிகாரிகள், டப்பாவாலாக்கள் போன்ற பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய, மேற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாநில அரசு கடிதம் எழுதி இருந்தது. அந்த கடிதத்தில் பெண்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி சேவை வரையிலும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இன்று முதல் அனுமதி

அரசின் இந்த கோரிக்கை தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுக்காமல் இருந்தது. இதற்கிடையே தங்களின் கோரிக்கை குறித்து விரைவில் முடிவு எடுக்குமாறு நேற்று காலை மாநில தலைமை செயலாளர் சஞ்சய் குமார் ரெயில்வே நிர்வாகத்தை கேட்டு கொண்டு இருந்தார். இந்தநிலையில் மும்பையில் பெண்களை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

மகிழ்ச்சி அடைகிறேன்

வரும் 21-ந் தேதி (இன்று) முதல் மும்பை புறநகர் மின்சார ரெயில்களில் பெண்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு 7 மணிக்கு பிறகும் பயணம் செய்யலாம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில அரசின் கடிதத்தை அடுத்து இந்த அனுமதியை வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்போது மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே தலா 700 மின்சார ரெயில் சேவைகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story