பெங்களூருவில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


பெங்களூருவில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 20 Oct 2020 9:39 PM GMT (Updated: 20 Oct 2020 9:39 PM GMT)

பெங்களூருவில் கனமழை பெய்ததை அடுத்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கும் வசதி இன்றி தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதே போல் தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் மழை பெய்யத்தொடங்கியது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. குறிப்பாக மெஜஸ்டிக், அல்சூர், எம்.ஜி.ரோடு, வில்சன் கார்டன், ஜெயநகர், பொம்மனஹள்ளி, பேகூர், சில்க்போர்டு, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். வீடுகளில் சாக்கடை நீருடன் புகுந்த மழை நீரை பாத்திரங்களில் எடுத்து வெளியேற்றினர். இதனால் அவர்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்க பாதைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாயினர். மழை காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகன நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story