சீர்காழி அருகே மகன் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
சீர்காழி அருகே மகன் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி,
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியை அடுத்த எடமணல் ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 27). இவர், கடந்த 10-ந் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரில் கொலை செய்யப்பட்டார்.
மகன் இறந்ததில் இருந்து சேகர் அவரது நினைவாகவே இருந்தார். சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் இருந்து மீள முடியமல் தவித்து வந்தனர்.
இறந்துபோன சந்தோஷ் நினைவாக நேற்று அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் சேகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். அடுத்தடுத்து மகனையும், கணவரையும் இழந்த தமிழரசி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்.
Related Tags :
Next Story