வெற்றியூரில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா - சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெற்றியூரில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தவமணி சுப்பிரமணியன். இவர் அந்த கிராமத்தில் எந்த திட்டங்களையும் சரிவர செய்யவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும், நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர் தனிப்பட்ட முறையில் நிலத்தகராறில் ஈடுபட்டதற்கு கூட ஊராட்சி மன்ற தலைவர் தான் காரணம் என்பது போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் தவமணி நேற்று வெற்றியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து, அவதூறாக செய்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கைவிட்டார். ஊராட்சி மன்ற தலைவரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story