குடுமியான்மலையில், வாலிபர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை


குடுமியான்மலையில், வாலிபர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2020 3:45 AM IST (Updated: 21 Oct 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

குடுமியான்மலையில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை கொல்லம்பட்டி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டுடன் ரத்த வெள்ளத்தில் நேற்று மாலை பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலையானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், கொலையானவர் பெயர் மணிகண்டன் (வயது 20), உய்யக்குக்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக அவரை மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story