கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணகிரி அணை நிரம்புகிறது கரையோர மக்களுக்கு - வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + Heavy rains in Karnataka catchment areas Krishnagiri Dam fills up For coastal people Flood risk warning
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணகிரி அணை நிரம்புகிறது கரையோர மக்களுக்கு - வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கிருஷ்ணகிரி அணை நிரம்பி வருகிறது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் பிரதான முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்ததால் புதிய மதகு பொருத்தப்பட்டது. இதன் பின்னர் ரூ.19 கோடி மதிப்பில் 7 மதகுகளும் புதிதாக மாற்றிமைக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அணையில் 42 அடிக்கு கீழ் தான் தண்ணீர் தேக்கி வைத்தனர். பாசனத்திற்கு மட்டும் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 280 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 114 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி. அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இதையடுத்து அணையை கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக பகுதி மற்றும் ஓசூர், சூளகிரி பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்றைய (நேற்று) நிலவரப்படி அணையின் மொத்த நீர்மட்டமான 52 அடியில் 48 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 1666.29 மில்லியன் கனஅடியில் தற்போது, 1238.06 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும். எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) சரவணகுமார், உதவி பொறியாளர் சையத் ஜக்ருதீன், கிருஷ்ணகிரி தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கிருஷ்ணகிரி அணை நிரம்ப உள்ளதை முன்னிட்டு பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் கரையோரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.