அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:55 PM IST (Updated: 21 Oct 2020 3:55 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், முத்து, கிரைசாமேரி, நகர செயலாளர் ஜோதிபாசு, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் நக்கீரன், சின்னம்பள்ளி பகுதி செயலாளர் சக்திவேல், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்துக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். விதிகளை மீறி செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story