மாவட்ட செய்திகள்

திருவட்டாரில் யூனியன் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் கைது + "||" + In Thiruvattar Attacked the Union Councilor 3 people arrested

திருவட்டாரில் யூனியன் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் கைது

திருவட்டாரில் யூனியன் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் கைது
திருவட்டார் யூனியன் கவுன்சிலரை தாக்கிய வழக்கில் சூதாட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்,

திருவட்டார் யூனியனில் 9-வது வார்டு கவுன்சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டகுழு உறுப்பினராகவும் இருப்பவர் செட்டிசார்விளை கன்னிமார்கோணம் பகுதியை சேர்ந்த சகாயஆன்டனி (வயது 46).

கடந்த 7-ந்தேதி இரவு சகாய ஆன்டனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதில், படுகாயமடைந்த அவர் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் திருவட்டார் யூனியன் கவுன்சிலர்கள் சகாய ஆன்டனியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தி வந்தனர்.


இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது, போலீசாருக்கு சுவாமியார்மடம், காட்டாத்துறை, புல்லுவிளை போன்ற இடங்களில் ரகசியமாக இயங்கும் சூதாட்ட கும்பல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளை சைபர் கிரைம் மற்றும் திருநெல்வேலியிலிருந்து வந்த டவர்டெம் பிரிவினர் தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு மேற்கொண்டதில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40), புல்விளை பகுதியை சேர்ந்த சுனில் நாயகம் (35), வியன்னூர் பகுதியை சேர்ந்த வினுகுமார் (38) என்ற பரளியாண்டி ஆகியோரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சூதாட்டம் குறித்து போலீருக்கு தகவல் தெரிவிப்பதால், சூதாட்டம் நடத்த முடியாமல் லட்சகணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும், போலீசாருக்கு தகவல் கொடுத்தது கவுன்சிலர் சகாயஆன்டனிதான் என்கிற சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தாக்க தங்களது கும்பலை சேர்ந்த ஆட்களை தயார் செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 6 பேரை தேடி வருகின்றனர்.