நந்தூர்பரில் பயங்கர விபத்து 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலி 34 பேர் காயம்


நந்தூர்பரில் பயங்கர விபத்து 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலி 34 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Oct 2020 3:16 AM IST (Updated: 22 Oct 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

நந்தூர்பரில் 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.

மும்பை,

நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கி நேற்று தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3.15 மணி அளவில் கோண்டாய் பரி மலைப்பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற பஸ்சை டிரைவர் முந்த முயற்சித்தார். அப்போது, எதிரே லாரி ஒன்று வந்ததை கண்ட டிரைவர் விபத்தை தவிர்க்க பஸ்சை திருப்பினார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியி்ல் கண் விழிப்பதற்குள் பஸ் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

விபத்தில் சிக்கிய பயணிகள் மரண ஓலம் எழுப்பினர். தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்து வந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் காலை 11.30 மணி வரை, அதாவது 8 மணி நேரம் மீட்பு பணி நடந்தது.

5 பயணிகள் பலி

இதில் 5 பேரை பிணமாக தான் மீட்க முடிந்தது. இறந்தவர்கள் 3 ஆண் பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டர் என்று தெரியவந்தது. மேலும் 34 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த துயர விபத்து குறித்து விசர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story