அரசு அதிகாரிகள் மீது குவியும் புகார்: காரைக்காலில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு முகாம் + "||" + Accumulation of complaints against government officials: Corruption Eradication Special Camp in Karaikal
அரசு அதிகாரிகள் மீது குவியும் புகார்: காரைக்காலில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு முகாம்
அரசு அதிகாரிகள் மீது லஞ்சம் தொடர்பாக அதிகளவில் புகார்கள் வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் காரைக்காலில் சிறப்பு முகாம நடைபெற்றது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகளவில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காரைக்காலுக்கு வந்தனர்.
அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அரசு நிர்வாக வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்தி, லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர்.
இந்த சிறப்பு முகாம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அச்சமின்றி புகார் அளிக்கலாம்
கொரோனா தொற்று காரணமாக, லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க மக்கள் புதுச்சேரிக்கு வர சிரமங்கள் இருந்தன. அதனால் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தி புகார்கள் குறித்து விசாரிக்கவும், புதிய புகார்களை பெறவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி காரைக்காலில் முதல் சிறப்பு முகாம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டது. பிற பகுதிகளிலும் இதுபோல் முகாம் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாமில் மக்கள் அச்சம் இன்றி புகார் அளிக்கலாம். ஏற்கனவே 20 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் அளிக்க நேரில் வர முடியாதவர்கள் 9443427787, 0413- 2238016, 2238017 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொது மக்களிடம் இருந்து புகார்கள் வருவதை பொறுத்து இந்த முகாம் விரிவுபடுத்தப்படும்.