நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு - தொடர் வழிப்பறியில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு - தொடர் வழிப்பறியில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2020 3:30 AM IST (Updated: 22 Oct 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம், செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றுவிட்டனர். தொடர் வழிப்பறியில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை நகரத்தை ஓட்டி அமைந்துள்ளது கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலையில் வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு வடமாவட்டத்தில் இருந்து வரும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் நாகை புத்தூர் முதல் வடகுடி பிரிவு சாலை வரை உள்ள பகுதிகளில் திருநங்கைகள் சாலையில் செல்வோரிடம் தகாத செயல்களில் ஈடுபட்டு பணம் பறிப்பது நடைபெற்று வந்தது. பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் திருநங்கைகளை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அந்த வழியாக வேலைக்கு செல்வோரை குறிவைத்து அரிவாளை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறிப்பது தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை மகன் சூரியபிரசாந்த்(வயது24). இவர் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு பணிக்காக நாகை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சூரியபிரசாந்த்தை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக தொடர் வழிப்பறியால் பாதிக்கப்பட்டவர்கள் நாகை வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story