மேலபூவனூரில், நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு


மேலபூவனூரில், நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 10:15 PM GMT (Updated: 22 Oct 2020 1:58 AM GMT)

நீடாமங்கலம் அருகே மேலபூவனூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் 43 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில் 18 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேலபூவனூர், வெள்ளாம் பூவனூர், காளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் எதிரே மற்றும் அருகில் குவித்து வைத்துள்ளனர். அப்போது கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் நெல் நிறம் மாறியும், பல இடங்களில் முளைத்தும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

நீடாமங்கலம் அருகில் உள்ள காளாச்சேரி ஊராட்சி மேலபூவனூரில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான கொட்டகை அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அந்த இடத்தில் கொட்டி குவியலாக வைத்திருந்தனர். அங்கு இடம் போதாத நிலையில் அருகில் உள்ள திடல் மற்றும் பாலம், வீடுகளில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகளை மழையிலும் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அரசு நெல் கொள்முதல் நிலையம் மேலபூவனூரில் திறப்பதாக கூறினர். ஆனால் இதுவரை திறக்கவில்லை. இதையடுத்து குவித்து வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளது எனவும், நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரியும் விவசாயிகள் நேற்று நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம் அருகில் கொண்டியாறு பாலம் அருகில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story