“மதுபாட்டில் திருடியதை பார்த்ததால் கை,கால்களை கட்டி கிணற்றில் வீசினோம்” - காவலாளி கொலையில் கைதான 2 பேர் வாக்குமூலம்


“மதுபாட்டில் திருடியதை பார்த்ததால் கை,கால்களை கட்டி கிணற்றில் வீசினோம்” - காவலாளி கொலையில் கைதான 2 பேர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 Oct 2020 4:45 AM GMT (Updated: 22 Oct 2020 5:25 AM GMT)

டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடியதை பார்த்ததால் காவலாளியை கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொலை செய்ததாக 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கண்மாய் கரைக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் 20-ந்தேதி சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போயின.

இந்த சம்பவத்தின்போது அங்கு காவலுக்கு இருந்த கணேசன் (வயது 55) என்பவர் மாயமானார். மறுநாள் அவர் டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டும், வாய், தலைப்பகுதி டேப் துணியால் சுற்றப்பட்டும் பிணமாக மிதந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கிய ஆனந்தராஜ் ஆலோசனையின்பேரில் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். நேற்று வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் ஒருவர் மதுரை அண்ணாநகர் எஸ்.என்.சி காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வகணபதி (19) என்பதும், மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்கள்தான் வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்தவர்கள் என்பதும், இதனை பார்த்த காவலாளி கணேசனை கொலை செய்ததும் தெரிய வந்தது.

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடியபோது அதனை காவலாளி கணேசன் பார்த்து கண்டித்துள்ளார். அவர் சத்தம் போடாமல் இருக்க ஆடு, மாடு திருடுவதற்கு பயன்படுத்தும் டேப்பால் வாய், தலைப்பகுதியை சுற்றியும், கை, கால்களை கட்டியும் தூக்கி சென்று அந்த பகுதியில் இருந்த கிணற்றில் வீசி விட்டுச் சென்றதாக அவர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் மதுரை இளம் சிறார் நீதி குழுமத்திலும், செல்வகணபதி வாடிப்பட்டி கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story